

சென்னை : நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் 2022க்கு தேர்வானவர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள், வாழ்த்துக்குரியவர்கள் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
"மத்திய அரசு நாட்டின் பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு பத்ம விருதுகளை அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது.
பொது விவகாரங்கள், கல்வி, விளையாட்டு, அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம், தொழில், மருத்துவம், இலக்கியம், கலை, சமூகப்பணி, குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் தலைசிறந்து பணியாற்றியவர்களுக்கும், சேவையாற்றியவர்களுக்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்ம விருது பட்டியலில் நாடு முழுவதும் இருந்து இடம்பெற்றுள்ள 128 பேரில் தமிழகத்தைச் சேர்ந்த 7 பேர் இடம் பெற்றிருப்பதும் பாராட்டுக்குரியது.சமீபத்தில் உயிரிழந்த முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் (பத்ம விபூஷண்), கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை (பத்ம பூஷண்), கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் (பத்ம ஸ்ரீ), மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா (பத்ம பூஷண்), டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவரான சந்திரசேகரன் (பத்ம விபூஷண்), பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி (பத்ம ஸ்ரீ), கிளாரினெட் இசைக் கலைஞர் ஏகேசி நடராஜன் (பத்ம ஸ்ரீ), சதிர் நடனக்கலைஞர் முத்து கண்ணம்மாள் (பத்ம ஸ்ரீ) உள்ளிட்ட பத்ம விருதுகள் பெறும் அனைவரும் தாங்கள் சார்ந்த துறையில் மிகச் சிறந்து விளங்கியவர்கள்.
பத்ம விருது பெறும் மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரியவர்கள் அனைவரும் தங்கள் துறையில் மென்மேலும் சிறந்து விளங்கி பல்வேறு விருதுகளைப் பெற்று வாழ்வில் சிறக்க தமாகா சார்பில் வாழ்த்துகிறேன்."
இவ்வாறு ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.