

சென்னை: "பொங்கல் பரிசுத் தொப்பில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பு வெறும் கண் துடைப்பு நாடகம்" என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பொங்கல் பரிசுத் தொகுப்பில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் கூறியிருப்பது வெறும் கண் துடைப்பு நாடகம். தரமற்ற பொருட்கள் மக்களுக்கு போய் சேர்ந்த பிறகு இவர் நடவடிக்கை எடுப்பதால் என்ன பயன் ஏற்படப்போகிறது?
பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டெண்டரிலேயே முறைகேடுகள் நடப்பதாக செய்திகள் வெளியானபோது அதனைத் தடுத்து நிறுத்திட வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தோம். அப்போதெல்லாம் விட்டுவிட்டு தரமற்ற பொங்கல் பரிசு தொகுப்புகள் விநியோகம் முடிந்த பிறகு ஆலோசனை, நடவடிக்கை என்பதெல்லாம் மக்களை ஏமாற்ற செய்யும் வேலைதானே?!" என்று டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.