

சென்னை: கரோனா பரவலுக்கு மத்தியில் மக்களைப் பற்றி துளியும் கவலைப்படாமல் டாஸ்மாக் கடைகளைத் திறந்துவைத்து வருமானத்தை மட்டுமே பார்ப்பதா என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நாட்டிலேயே கரோனா தொற்று அதிகம் பாதித்த மாநிலங்களில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் இருக்கிறது. நாள்தோறும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துகொண்டே இருக்கிறது.
இவ்வளவுக்குப் பிறகும் எத்தனையோ பேர் தொடர்ந்து வலியுறுத்தியதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல், திமுக அரசு டாஸ்மாக் மதுக்கடைகளைத் திறந்து வைத்திருக்கிறது. மக்களைப் பற்றி துளியும் கவலைப்படாமல் வருமானத்தை மட்டுமே பார்ப்பதா? ஆட்சியாளர்களுக்கு மனசாட்சி கொஞ்சமாவது இருக்கிறதா?" என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.