

புதுச்சேரி: கரோனா அச்சுறுத்தல் காரணமாகத் தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரி, காரைக்காலில் 10, 12-ம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகப் புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 19-ம் தேதி அதாவது புதன்கிழமை முதல் தொடங்கவிருந்த திருப்புதல் தேர்வையும் தமிழக அரசு ஒத்திவைத்தது. தமிழகப் பாடத்திட்டம் புதுச்சேரி, காரைக்காலில் பின்பற்றப்படுகிறது. அதே நேரத்தில் புதுவையில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப் பள்ளிகள் தொடர்ந்து இயங்கும் என சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது. இந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்குப் புதுவை கல்வித்துறை தயாரிக்கும் வினாத்தாள் அடிப்படையில் திருப்புதல் தேர்வு நடைபெறும் என்று அரசு அறிவித்திருந்தது.
தமிழகத்தைப் பின்பற்றி வரும் 19-ம் தேதி தொடங்கவிருந்த திருப்புதல் தேர்வை புதுச்சேரி அரசின் கல்வித்துறை ஒத்திவைத்துள்ளது. இதற்கான அறிவிப்பை கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி வெளியிட்டுள்ளார்.