Published : 15 Jan 2022 06:27 PM
Last Updated : 15 Jan 2022 06:27 PM

சென்னை-B வானொலி சேவை நிறுத்தப்பட்டது ஏமாற்றமளிக்கிறது:  அன்புமணி

கோப்புப் படம்

சென்னை: "சென்னை-B வானொலி சேவை நிறுத்தப்பட்டது ஏமாற்றமளிக்கிறது, உடனடியாக மீண்டும் தொடங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "சென்னையிலிருந்து 1017 KHz மத்திய அலையில் ஒலிபரப்பாகி வந்த சென்னை வானொலி நிலையத்தின் ’பி’ அலைவரிசை சேவை நேற்றுடன் நிறுத்தப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. 9 மணி நேர சேவை நிறுத்தப்பட்டது சென்னை வானொலி நேயர்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது.

சென்னை வானொலி நிலையத்தின் ’பி’ அலைவரிசை 1979 முதல் 32 ஆண்டுகளாக தமிழில் தனித்துவமான நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கி வந்தது. அதற்கு மிகப்பெரிய எண்ணிக்கையில் நேயர்கள் உண்டு. அவர்கள் இனி விரும்பிய நிகழ்ச்சிகளை கேட்டு அனுபவிக்க முடியாமல் ஏமாற்றமடைவர்.

சென்னையிலிருந்து 720 KHz மத்திய அலையில் சென்னை வானொலியின் முதன்மை அலைவரிசை ஒலிபரப்பாகி வருகிறது. ஆனால், சென்னை வானொலியின் பி அலைவரிசை சென்றடைந்த குக்கிராமங்களையும், தொலைதூரப்பகுதிகளையும் முதன்மை அலைவரிசையால் சென்றடைய முடியாது.

சென்னை-பி அலைவரிசை நிறுத்தப்படுவதால் இனி சென்னை வானொலியில் முதன்மை அலைவரிசை, வர்த்தக ஒலிபரப்பு, பண்பலை ஆகிய 3 அலைவரிசைகள் மட்டுமே ஒலிபரப்பாகும். அதனால் இந்த சேவையால் நேரடியாகவும், மறைமுகமாகவும் நூற்றுக்கணக்கானோர் வேலை இழப்பார்கள்.

சென்னை பி அலைவரிசை நிறுத்தப்படுவதற்காக வானொலி நிர்வாகத்தால் கூறப்படும் காரணங்கள் சரியல்ல. டிஜிட்டல்மயம் என்ற பெயரில் வானொலி சேவைகளை நிறுத்துவது பெரும் தவறு. நிறுத்தப்பட்ட அலைவரிசைகளை மீண்டும் தொடங்க மத்திய அரசு ஆணையிட வேண்டும்" என்று அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x