

கோவை: வரும் 21-ம் தேதி பார்வையாளர்களின்றி ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.
கோவை எல் அண்ட் டி பைபாஸ் சாலை அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற உள்ள இடத்தை மாவட்ட ஆட்சியர் சமீரன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் கூறியதாவது:
"அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி கோவையில் வரும் 21-ம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 500 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் கலந்துகொள்ள உள்ளனர். அதற்கேற்ப அவசர சிகிச்சை வசதி, கால்நடை மருத்துவ வசதி போன்றவை ஏற்படுத்தப்படும். காளைகள் ஆரோக்கியமாக உள்ளனவா, போட்டியில் பங்கேற்கத் தகுதியானவையா என்பதை அறிய 5 மருத்துவக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவுள்ளன.
கோவையில் பரவி வரும் கரோனா தொற்றுப் பரவலைக் கருத்தில்கொண்டு இந்த முறை போட்டியை நேரடியாகக் காணப் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. போட்டியைத் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை போட்டி நடைபெறும்."
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.