8 கிராம் தங்க நாணயத்துடனான திருமண நிதியுதவி திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

8 கிராம் தங்க நாணயத்துடனான திருமண நிதியுதவி திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் 8 கிராம் தங்க நாணயத்துடனான திருமண நிதியுதவி திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் செயல்படுத்தப்படும் திருமண உதவித் திட்டம் என்பது பெண்களின் உயர்கல்வியை ஊக்கப்படுத்தும் வகையிலும், பெண்களின் திருமணத்திற்காக பெண் குழந்தைகளின் பெற்றோருக்கு திருமண நிதியுதவி மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்கு தங்க நாணயம் அளிக்கும் வகையிலும், ஏழைப் பெற்றோரின் மகள், ஆதரவற்ற பெண்கள், மறுமணம் செய்து கொள்ளும் விதவையர், ஏழை விதவையரின் மகள், கலப்புத் திருமணம் செய்துகொள்ளும் தம்பதியர் ஆகியோர் பயன்பெறும் வகையிலும் செயல்படுத்தப்படும் தலையாயத் திட்டமாகும்.

இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு 8 கிராம் தங்க நாணயத்துடன் நிதியுதவியும் வழங்கப்பட்டு வருகிறது. திருமண நிதியுதவி திட்டங்களின் கீழ் 2021-2022ம் நிதியாண்டிற்கு 762 கோடியே 23 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு படித்த 53,599 பயனாளிகள், பட்டதாரியல்லாத 41,101 பயனாளிகள், என மொத்தம் 94,700 பயனாளிகள் பயனடைய உள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின் இன்று (13.1.2022) தலைமைச் செயலகத்தில், சென்னை மாவட்டத்தைச் சார்ந்த 2,900 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் அடையாளமாக 5 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவித் தொகையுடன் 8 கிராம் தங்க நாணயத்தை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தலைமைச் செயலாளர் முனைவர் இறையன்பு மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்’ என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in