Published : 12 Jan 2022 12:29 PM
Last Updated : 12 Jan 2022 12:29 PM

வேளாண், தோட்டக்கலை உதவி அலுவலர் பணிக்கான நியமன ஆணை: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

சென்னை : வேளாண் துறையில் காலியாக உள்ள 391 இடங்களுக்கு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாகத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்குப் பணி நியமன ஆணை வழங்கும் அடையாளமாக 10 பேருக்குப் பணி நியமன ஆணையை முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "உழவர்களின் நலன் காத்திட வேளாண்மைத் துறையினை, வேளாண்மை-உழவர் நலத்துறை எனப் பெயர் மாற்றம் செய்து, உழவர்களின் வருவாயைப் பெருக்கிட வேளாண்மை-உழவர் நலத்துறைக்கு எனத் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து, தமிழகத்தில் உள்ள வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திட முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

வேளாண் துறை சார்ந்த பணிகளை விரைந்து மேற்கொள்ளவும், வேளாண் திட்டங்கள் கடைக்கோடி விவசாயிகளுக்கும் சென்றடையும் வகையிலும், வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக, இத்துறைகளில் காலியாக உள்ள 161 உதவி வேளாண் அலுவலர் மற்றும் 230 உதவித் தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்குவதன் அடையாளமாக, 5 உதவி வேளாண் அலுவலர் பணியிடத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கும், 5 உதவித் தோட்டக்கலை அலுவலர் பணியிடத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கும், முதல்வர் ஸ்டாலின் இன்று (12.1.2022) தலைமைச் செயலகத்தில் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறை செயலாளர் சமயமூர்த்தி, வேளாண்மை இயக்குநர் அண்ணாதுரை மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்" என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x