Last Updated : 08 Jan, 2022 12:18 PM

 

Published : 08 Jan 2022 12:18 PM
Last Updated : 08 Jan 2022 12:18 PM

2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் அனுமதி

காரைக்கால்: கரோனா, ஒமைக்ரான் பரவல் காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதால், திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் இன்று (ஜன.8) பக்தர்களின் வருகை குறைந்து காணப்பட்டது.

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாற்றில் சனி பகவானுக்குத் தனி சன்னதியுடன் கூடிய புகழ்பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு நாடு முழுவதிலுமிருந்து சனிக்கிழமைகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் கரோனா, ஒமைக்ரான் பரவல் சூழல் காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதனடிப்படையில் 2 தவணை தடுப்பூசி செலுத்தியோர் மட்டுமே திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத எவர் ஒருவரும் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என காரைக்கால் மாவட்ட ஆட்சியர் நேற்று அறிவித்திருந்தார்.

மேலும் நளன் குளம் உள்ளிட்ட அனைத்துத் தீர்த்தங்களிலும் பக்தர்கள் நீராடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நளன் குளத்திலிருந்து மோட்டார் மூலம் நீர் இறைக்கப்பட்டு வடியச் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கட்டுப்பாடுகளாலும், தமிழகப் பகுதிகளில் இரவு நேரப் பொது முடக்கம் அமலில் உள்ளதாலும் சனிக்கிழமையான நேற்று வழக்கத்தை விட மிகவும் குறைவாகவே பக்தர்களின் வருகை காணப்பட்டது. சனிக்கிழமைகளில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பிக் காணப்படும் கோயிலின் முகப்புப் பகுதி, பிராகாரங்கள் கூட்டமின்றிக் காணப்பட்டது. தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, கரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி மட்டுமே கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். காரைக்கால் மாவட்ட எல்லைப் பகுதிகளிலும் போலீஸார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x