

புதுச்சேரி: வானொலி சேவையை விரிவுபடுத்தவே மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் தேசிய இளைஞர் தினவிழா வரும் 12ம் தொடங்கி 16ம் தேதி வரை நடைபெறவுள்ளது. நாடு முழுவதுமிருந்து 7,500 இளையோர் பங்கேற்கும் இந்நிகழ்வு நடைபெறும் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தை அமைச்சர் அனுராக் தாக்கூர் இன்று நேரில் பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து தனியார் ஹோட்டலில் நடந்த நிகழ்வில் தேசிய இளைஞர் தினவிழாவுக்கான லோகோ, விழா தூதுவராக புதுச்சேரி மாநில விலங்கான அணில் கார்ட்டூன் படங்களை துணைநிலை ஆளுநர் தமிழிசை வெளியிட்டார். இந்த நிகழ்வில் முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், கல்வியமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறும்போது, "12ம் தேதி நடைபெறவுள்ள இந்நிகழ்வை பிரதமர் மோடி தொடங்கி வைத்து உரையாற்றவுள்ளார். இத்திருவிழாவை புதுச்சேரியில் நடத்த பிரதமர் விரும்பினார். அவர் நிகழ்வை தொடங்கி வைப்பதுடன், இளையோரிடம் கலந்துரையாடுகிறார். கடந்த சில ஆண்டுகளில் புதிய நிறுவனங்களை தொடங்குவோர், சுயதொழில் புரிவோர், வங்கி சார்ந்த துறைகள், தொழில்முனைவோர் அதிகரித்துள்ளனர். வேலை கேட்போரை விட வேலை தருவோர் அதிகரித்துள்ளனர்.
வானொலி சேவையை நாங்கள் முடக்கவில்லை. மாறாக விரிவுபடுத்தவே செய்கிறோம். பிரதமர் உரையாற்றும் "மான் கி பாத்" நிகழ்வை வானொலியில் கேட்போர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. தற்போது தொலைபேசியில் கேட்கும் வகையில் தொழில்நுட்ப ரீதியாக பலப்படுத்தியுள்ளோம். இந்திய விளையாட்டு ஆணையத்தில் பெறப்பட்ட பாலியல் புகார் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளின் படி நடவடிக்கை எடுக்கிறோம்" என்று அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.