Published : 04 Jan 2022 10:49 AM
Last Updated : 04 Jan 2022 10:49 AM

துப்பாக்கி சுடும் பயிற்சியில் உயிரிழந்த சிறுவன்; மத்திய அரசு இழப்பீடு வழங்குக: டிடிவி தினகரன்

கோப்புப் படம்

சென்னை : புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே உள்ள பசுமலைப்பட்டி துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் இருந்து மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் 2021 டிசம்பர் 30 தேதி பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது, எதிர்பாராத விதமாக துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு, சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில், உறவினர் வீட்டின் வெளிப்புறத்தில் அமர்ந்திருந்த கொத்தமங்கலத்துப் பட்டியைச் சேர்ந்த புகழேந்தியின்(11) என சிறுவன் மீது பாய்ந்தது.

தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட சிறுவன் புகழேந்திக்கு தலைக்குள் இருந்த குண்டு 4 மணிநேர அறுவைச் சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டது. இருப்பினும் மூளை நரம்பு மண்டலத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக 2022 ஜனவரி 3ம் தேதியான நேற்று சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான். விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் மாநில அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்தார்.

இதனிடையே, உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு மத்திய அரசு சார்பில் இழப்பீடு வழங்க வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்:

"புதுக்கோட்டை நார்த்தாமலை அருகே மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரின் (CISF) துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது குண்டடிபட்ட சிறுவன் புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது.

சிறுவனை இழந்து வாடும் பெற்றோருக்கும் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இனி ஒரு சம்பவம் இப்படி அங்கே நடக்காதவாறு உரிய ஏற்பாடுகளை உடனடியாக செய்திட வேண்டும். அதோடு உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு மத்திய அரசும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்."

இவ்வாறு டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x