

புதுச்சேரி: புதுச்சேரியில் நடப்பாண்டில் காலியாக உள்ள ஆயிரம் காவலர் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறவுள்ளதாக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் எஸ்ஐ, ஏஎஸ்ஐ, தலைமைக் காவலர் மற்றும் போலீஸார் என 163 பேருக்குப் பதவி உயர்வு ஆணைகளை காவல்துறை தலைமை அலுவலகத்தில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் இன்று வழங்கினார்.
அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"காவல்துறையில் பல்வேறு பதவிகளில் 163 பதவி உயர்வு வழங்கப்படாமல் இருந்தது. இப்போது இந்தப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. "ஆப்ரேஷன் விடியல்" என்ற பெயரில் போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க நடவடிக்கை எடுத்தோம். இதில் 88 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 163 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டம்- ஒழுங்கைக் கட்டுப்பாட்டில் வைக்க "ஆப்ரேஷன் திரிசூலம்" என்ற பெயரில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். லாஸ்பேட்டை, ரெட்டியார்பாளையம் காவல் நிலையங்களுக்குச் சொந்தக் கட்டிடம் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
போலீஸாருக்கு சீருடைப்படி இன்று விடுவித்துள்ளோம். மேலும், 3 ஆண்டு நிலுவைத்தொகையும் வழங்க முதல்வருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். ஜனவரி 20-ம் தேதிக்குள் 390 போலீஸாரைத் தேர்வு செய்வதற்கான தேர்வு நடத்தப்படும். உடல் தகுதித் தேர்வு, எழுத்துத் தேர்வு முடிந்து தேர்வானோருக்கு ஓராண்டுப் பயிற்சி முடித்து காலி இடங்களில் நிரப்புவோம்.
2-ம் கட்டமாக 300 காவலர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்வும், 400 ஊர்க்காவல்படை வீரர்கள் தேர்வு என இந்த ஆண்டில் காலியாக உள்ள மொத்தம் ஆயிரம் காவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வும் நடத்தப்படும். இந்த ஆண்டுக்குள் காலியாக உள்ள 47 எஸ்ஐ பணியிடங்களை நேரடியாகத் தேர்வு செய்ய மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கோரியுள்ளோம்.
அனுமதி வந்தவுடன் எஸ்ஐக்கள் தேர்வு நடத்தப்படும். காவலர்களுக்குப் பல்வேறு பணிகளுக்கான நிலுவைத்தொகை வழங்கப்படாமல் உள்ளது. போக்குவரத்துக் காவல் பணிக்கு நவீன கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. அவை செயல்பாட்டுக்கு வரும். போக்குவரத்துக் காவல் பணியில் பற்றாக்குறை உள்ளது. புதிதாகத் தேர்வு செய்வோரை இதில் தேவைக்கு ஏற்ப நிரப்புவோம்".
இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.