Published : 30 Dec 2021 06:37 PM
Last Updated : 30 Dec 2021 06:37 PM

சாகித்ய அகாடமி, பால புரஸ்கார் விருது: தமிழ் எழுத்தாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின், தினகரன் வாழ்த்து

கோப்புப் படம்

சென்னை: சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் அம்பைக்கும், பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்ற கவிஞர் முருகேஷுக்கும் முதல்வர் ஸ்டாலின், டிடிவி தினகரன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "தனது 'சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை' என்ற சிறுகதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் அம்பைக்கு வாழ்த்துகள்!

தமிழில், பல ஆண்டுகளுக்குப் பின் பெண் எழுத்தாளருக்கு விருது அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். பெண் படைப்பாளிகளுக்கு இது மேலும் ஊக்கமளிக்கட்டும்.

கவிஞர் மு.முருகேஷ், 'அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை' என்ற படைப்பிற்காக பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்றமைக்கு வாழ்த்துகள்! சிறார்களுக்கான எளிய மற்றும் இனிய படைப்புகள் தமிழில் செழித்திட இந்த விருது ஊக்கம் அளிக்கட்டும்" என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதேபோல் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துப் பதிவில், "சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு பெற்றுள்ள எழுத்தாளர் முனைவர் அம்பை என்கிற C.S.லட்சுமிக்கும், பால சாகித்ய புரஸ்கார் விருது பெறவிருக்கும் கவிஞர்.மு.முருகேஷுக்கும் மனப்பூர்வமான வாழ்த்துகள்.

பெண்ணியச் சிந்தனைகளின் பல வடிவங்களை எழுத்தில் தந்தவரும், பெண் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவருமான முனைவர் அம்பையின் பணிகளுக்கு இந்த விருதின் மூலம் கிடைத்திருக்கும் அங்கீகாரம் மகிழ்ச்சி தருகிறது. இதேபோன்று, இளம் படைப்பாளியான முருகேஷ் இன்னும் பல விருதுகளைப் பெற்று சாதனைகள் புரிந்திட வாழ்த்துகிறேன்" என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x