சுரப்பா மீது தமிழக அரசே நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்

சுரப்பா மீது தமிழக அரசே நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்
Updated on
1 min read

சென்னை: அண்ணா பல்கலைக்கழக முறைகேட்டில் முன்னாள் துணைவேந்தர் சுரப்பா மீது தமிழக அரசே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பான விசாரணை அறிக்கையின் அடிப்படையில் முன்னாள் துணைவேந்தர் சுரப்பா மீது ஆளுநர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியிருப்பது ஏமாற்றமளிக்கிறது!

சுரப்பா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிப்பதற்கான நீதியரசர் கலையரசன் ஆணையத்தை முந்தைய ஆட்சியில், அரசுதான் அமைத்ததே தவிர, ஆளுநர் அமைக்கவில்லை. சுரப்பா மீதான விசாரணையைக் கைவிடும்படி ஆளுநர் மாளிகை மறைமுக அழுத்தம் கொடுத்தபோதும்கூட அதற்கு அரசு பணியவில்லை!

பல்கலைக்கழகங்களின் வேந்தர் ஆளுநர்தான் என்றாலும் கூட, அது ஒரு கவுரவப் பதவிதானே தவிர அதிகாரம் பெற்ற பதவி அல்ல. பல்கலைக்கழகங்கள் மீதான அரசின் உரிமைகளை ஆளுநர் மாளிகைக்குத் தாரை வார்க்கக் கூடாது. அது மாநில சுயாட்சிக்கு எதிரான நிலைப்பாடாக அமைந்துவிடும்!

கடந்த காலங்களில் முறைகேடு செய்த துணைவேந்தர்கள் மீது அரசுதான் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கு ஆளுநரின் ஒப்புதல்தான் பெறப்பட்டுள்ளதே தவிர, ஆளுநரே நேரடியாக நடவடிக்கை எடுக்கவில்லை. சுரப்பா விவகாரத்திலும் அதே நடைமுறையையே பின்பற்ற வேண்டும்!" என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in