

வேலூர்: வேலூரில் புற்றுநோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கேரள மாநில காங்கிரஸ் எம்எல்ஏ பி.டி தாமஸ் சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார்.
கேரள மாநிலம் இடுக்கியைச் சேர்ந்தவர் பி.டி தாமஸ் (71). அம்மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். மேலும், கேரள மாநிலத்தின் திருக்காட்கரை தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராகவும் பொறுப்பு வகித்து வந்தார்.
இந்நிலையில், கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த பி.டி தாமஸ் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்களும் அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சையை அளித்து வந்தனர்.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை பி.டி தாமஸ் உயிரிழந்தார். கேரள மாநிலத்தின் மிக முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவரான பி.டி தாமஸ் கடந்த 2016-ம் ஆண்டு முதல் எர்ணாகுளத்தில் உள்ள திருக்காட்கரை சட்டப்பேரவை உறுப்பினராக பதவி வகித்து வந்துள்ளார்.
மேலும், இவர் கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை இடுக்கி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். பி.டி தாமஸ் இறப்பு குறித்து கேரள ஆளுநர் தனது ட்விட்டர் பக்கத்த்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், கேரள மாநிலத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.