

சென்னை: நெல்லையில் பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்குப் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கே காரணம் என தேமுதிக தலைவர், பொதுச் செயலாளர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நெல்லை டவுன் பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில், கழிப்பறைச் சுவர் இடிந்து விழுந்ததில் 3 பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
கரோனா பரவல் காரணமாக சுமார் ஒன்றரை ஆண்டுகளாகப் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், வைரஸ் தொற்று குறைந்து, தற்போதுதான் பள்ளிகள் படிப்படியாகத் திறக்கப்பட்டு, மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர்.
இதுபோன்ற சூழலில் பள்ளியின் கழிப்பறைச் சுவர் இடிந்து விழுந்து மூன்று மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்குப் பள்ளி நிர்வாகமே காரணம். பள்ளியின் சுவர் எந்த அளவிற்கு உறுதியாக உள்ளது என்பதைக் கூட ஆய்வு செய்யாமல் பள்ளி நிர்வாகம் எப்படி பள்ளியைத் திறந்தது? பள்ளி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கால் எந்தத் தவறும் செய்யாத பிஞ்சுக் குழந்தைகளின் உயிர்கள் தற்போது பறிபோயுள்ளன.
சுமார் ஒன்றரை ஆண்டுகளாகப் பராமரிப்பின்றி மூடப்பட்டிருந்த பள்ளிகளின் உறுதித் தன்மையை ஆய்வு செய்த பின்னரே, பள்ளிகள் செயல்படுவதற்குத் தமிழக அரசு அனுமதி அளித்திருக்க வேண்டும்.
அவ்வாறு செய்திருந்தால் 3 மாணவர்களின் உயிரிழப்பைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம். உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படாமல் பள்ளிகள் திறக்கப்பட்டது கடும் கண்டனத்துக்குரியது. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க அனைத்துப் பள்ளி, கல்லூரிகளில் தமிழக அரசு ஆய்வு செய்து மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்" என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.