உதவித் தொகையை உயர்த்தக் கோரி போராடிய மாற்றுத்திறனாளிகள் கைது: விஜயகாந்த் கண்டனம்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: உதவித் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபடும் மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்படுவதை வன்மையாக கண்டிப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

"உதவித் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபடும் மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்படுவதை வன்மையாக கண்டிக்கிறேன். கரோனா தொற்றால் வேலையிழப்பு, உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் விலை ஏற்றம் உள்ளிட்ட காரணங்களால் மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினர் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் உயர்த்தப்படவில்லை. இதனால் மாதாந்திர உதவித்தொகையை 40 சதவீதம் ஊனம் உள்ளவர்களுக்கு ரூ.1,000-லிருந்து ரூ.3,000- ஆக உயர்த்தி வழங்க வேண்டும். கடும் ஊனம் உள்ளவர்களுக்கு ரூ.1,500-லிருந்து ரூ.5,000- ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தங்கள் உரிமைக்காக போராடும் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாமல், காவல்துறை மூலம் அவர்கள் கைது செய்யப்படுவதை வன்மையாக கண்டிக்கிறேன்.

புதுச்சேரியில் 40 சதவீதம் ஊனத்திற்கு அதிகபட்சம் ரூ. 3,800, தெலங்கானாவில் ரூ. 3,016 வழங்குகின்றனர். அதேபோல் தமிழகத்தில் ரூ. 3 ஆயிரமும், கடும் ஊனமுற்றவர்களுக்கு ரூ. 5 ஆயிரமும் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்."

இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in