

சென்னை: கேப்டன் வருண் சிங் மறைவிற்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 8-ம் தேதி கோவை சூலூர் விமான நிலையத்திலிருந்து நீலகிரியில் உள்ள வெலிங்டன் ராணுவக் கல்லூரி ஆய்வுக்காக இரு ஹெலிகாப்டர்கள் சென்றன. அதில் ஒரு ஹெலிகாப்டரில் முப்படைத் தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி, பிபின் ராவத் உதவியாளர், பாதுகாப்பு கமாண்டோக்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 14 பேர் பயணித்தனர்.
பணிப்பொழிவு காரணமாக ராணுவ ஹெலிகாப்டர் குன்னூர் அருகே விபத்துக்குள்ளாகியது. இதில் பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட13 வீரர்கள் உயிரிழந்தனர்.
விபத்தில் பாடுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குரூப் கேப்டன் வருண் சிங் ஒரு வாரத்திற்குப் பிறகு சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் வருண் சிங் மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், "குரூப் கேப்டன் வருண் சிங் மறைந்து விட்டார். வீரத்திற்காகவும், தியாகத்திற்காகவும் மக்களின் மனங்களில் நிலைத்திருப்பார். என் அஞ்சலிகள்" என்று தெரிவித்துள்ளார்.