

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களைக் கண்டறியும் வகையில் மரபணு பரிசோதனை நடத்தப்பட்டது.
நீலகிரி மாவட்டம் குன்னூரை அடுத்த காட்டேரிப்பள்ளம் அருகேயுள்ள நஞ்சப்ப சத்திரம் குடியிருப்பை ஒட்டிய வனப்பகுதியில் நேற்று காலை ராணுவ ஹெலிகாப்டர் கடும்பனி மூட்டம் காரணமாக மரத்தில் மோதி விபத்தில் சிக்கியது.
இதில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். குரூப் கேப்டன் வருண் சிங் படுகாயத்துடன் மீட்கப்பட்டார். அவர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உயிரிழந்த தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல் வெலிங்டன் ராணுவ மருத்துவனையில் பிரேதப் பரிசோதனைக்காகக் கொண்டுவரப்பட்டு, பரிசோதனைகள் முடிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், விபத்தில் வீரர்கள் பலரது உடல்கள் கருகியும், உடல் பாகங்கள் சிதறியும் கிடந்ததால் வீரர்களை அடையாளம் கண்டறிய மரபணு பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்குப் பிறகு வீரர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுப் பிரிக்கப்பட்டன.