

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத தமிழ்நாடு மின் வாரியத்தின் மதுரை மண்டல ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட மாட்டாது என்ற அறிவிப்பிற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
"கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மதுரை மண்டல ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட மாட்டாது என்ற அறிவிப்பு கண்டிக்கத்தக்கது.
மழை, வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் தங்களுடைய உயிரைப் பணயம் வைத்து முன்களப் பணியாளர்களாக செயல்படும் மின்வாரிய ஊழியர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்து தடுப்பூசி செலுத்துவது தான் ஒரு நல்ல அரசு நிர்வாகத்தின் பணியாக இருக்க முடியும்.
அதை விட்டுவிட்டு ஊசி போட்டுக்கொள்ளாவிட்டால் ஊதியம் வழங்க முடியாது என்பது சர்வாதிகார போக்காகும். இந்தத் தவறை மின்வாரிய நிர்வாகம் உடனடியாக சரி செய்து கொள்ள வேண்டும்."
இவ்வாறு தினகரன் தெரிவித்துள்ளார்.