

கரூர் மாவட்டம் புலியூரில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்டம் புலியூர் எஸ்.வெள்ளாளப்பட்டியில் 400க்கும் மேற்பட்ட பட்டியலினக் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கழிவுநீர்க் கால்வாய் வடிகால் முறையான பராமரிப்பின்றி உள்ளதால் மழை நீர் வெளியேற முடியாத நிலை உள்ளது. இதனால் மழை நீர் தேங்கி கொசு உற்பத்தியாகி சுகாதாரக் கேடு ஏற்படுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, சாக்கடையை முறையாக அள்ளாதது மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தராததைக் கண்டித்தும், முறையாக அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும் இன்று (நவ.29-ம் தேதி) புலியூர் பேரூராட்சி அலுவலகத்தை நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, தகவலறிந்து வந்த பசுபதிபாளையம் போலீஸார் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, கோரிக்கைகளை மனுவாகப் பெற்றுக் கொண்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.