

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
அதன்படி, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யும். தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும்.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மழை பெய்யும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.