Last Updated : 20 Nov, 2021 03:42 PM

 

Published : 20 Nov 2021 03:42 PM
Last Updated : 20 Nov 2021 03:42 PM

மயானத்துக்கு இடையே ஓடையில் வெள்ளப்பெருக்கு: படகில் எடுத்துச் செல்லப்பட்ட சடலம்

ரப்பர் படகில் எடுத்துச் செல்லப்பட்ட உயிரிழந்தவரின் சடலம்.

விருத்தாச்சலம்

விருத்தாச்சலம் அருகே மயானத்துக்கு இடையே ஓடையில் தண்ணீர் செல்வதால், இறந்தவரின் சடலத்தை உறவினர்கள், தீயணைப்புத் துறையினர் உதவியுடன் ரப்பர் படகு மூலம் எடுத்துச் சென்று இன்று இறுதிச் சடங்கு செய்தனர்.

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலத்தை அடுத்த சாத்துக்குடல் கிராமத்தைச் சேர்ந்த துரைக்கண்ணு என்பவரின் மனைவி ஆச்சிகண்ணு (78). இவர் வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு நேற்று உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் மயானத்துக்குச் செல்ல முயன்றனர். அப்போது, மயானத்துக்குச் செல்லும் வழியில் உள்ள ஓடையில், வெள்ளப்பெருக்கு காரணமாகக் கழுத்தளவு தண்ணீர் சென்றது.

இதனால் சடலத்தை எப்படி எடுத்துச் செல்வது என உறவினர்கள் திணறிய நிலையில், விருத்தாச்சலம் தீயணைப்புத் துறையினர் சடலத்தை எடுத்துச் செல்ல முன்வந்தனர். அதைத் தொடர்ந்து, காவல்துறையினரின் ஒத்துழைப்போடு, தீயணைப்புத் துறையினர் ரப்பர் படகு மூலம் இறந்தவரின் உடலை எடுத்துச் சென்று மயானத்தில் அடக்கம் செய்தனர்.

மழைக் காலங்களில் மயானத்துக்குச் செல்ல வழி இல்லாததால், அந்தப் பகுதியில் பாலம் அமைத்துத் தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x