Published : 19 Nov 2021 11:22 AM
Last Updated : 19 Nov 2021 11:22 AM
வேளாண் சட்டம் என்னும் இருள் விவசாயப் பெருமக்களை விட்டு விலகியதுள்ளதாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அச்சங்கத் தலைவர் பொன்னுசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
"கடந்த ஆண்டு மத்திய பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட மூன்று கறுப்பு வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தலைநகர் டெல்லியில் பல மாதங்களாக நடைபெற்று வரும் விவசாயப் பெருமக்களின் தொடர் அறவழிப் போராட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் இறுதியில் அச்சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி.
அன்று வணிகம் செய்ய வந்து ஒட்டுமொத்த பாரதத்தையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த கிழக்கிந்தியக் கம்பெனியை விரட்ட காந்தியடிகளின் தலைமையில் அகிம்சை எனும் அறவழி ஆயுதமே பிரதானமாகப் பயன்படுத்தப்பட்டு தேசம் அந்நியனின் பிடியில் இருந்து சுதந்திரம் அடைந்தது.
அதுபோல கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சாதகமாக மத்திய பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட மூன்று கறுப்பு வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யக் கோரி காந்தியார் தந்த அகிம்சை என்னும் அறவழிப் போராட்டத்தினை முன்னெடுத்து அதில் வெற்றியும் கண்டு, ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை நிரூபித்த விவசாயப் பெருமக்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.
விவசாயப் பெருமக்களைப் பிடித்திருந்த வேளாண் சட்டங்கள் எனும் இருள் கார்த்திகை தீபத் திருநாளில் விலகியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இனி எல்லாம் சுபமே".
இவ்வாறு பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT