

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலையில் நாளை உள்ளூர் விடுமுறையை அறிவித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.
ஐப்பசி மற்றும் கார்த்திகை மாதத்தையொட்டி, திருவண்ணாமலையில் கடந்த 9 நாட்களாக அண்ணாமலையார் கோயில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தன. விழாவின் 10-ம் நாளான நாளை திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படவுள்ளது.
கரோனா கட்டுப்பாடு காரணமாக திருவண்ணாமலைக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட பக்தர்கள் அல்லது ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை சான்றிதழ் வைத்திருக்கும் பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நவ.19-ம் தேதியான நாளை பரணி தீப தரிசனம் மற்றும் மகா தீப தரிசனம் நடைபெறவுள்ளதையொட்டி, மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, கார்த்திகை தீபத் திருநாளையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் சுற்ற அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கில் 20 ஆயிரம் பக்தர்கள் வரை கிரிவலம் சுற்ற அனுமதி அளிக்கப்படும் என்று அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.