

ஆழியாறு வனப்பகுதியில் கனமழையின் காரணமாக ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் அணையில் இருந்து 3,500 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
ஆழியாறு, பொள்ளாச்சி மற்றும் ஆழியாறு அணை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. இதனால், ஆழியாறு அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது. நேற்று இரவு ஆழியாறு அணைக்கு 6 ஆயிரம் கன அடி நீர்வரத்து ஏற்பட்டது. இதையடுத்து, 6 ஆயிரம் கன அடி உபரி நீர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை மழைப் பொழிவு குறைந்ததால் ஆழியாறு அணைக்கு நீர்வரத்து 3,500 கன அடியாக இருந்தது. ஆழியாறு அணையிலிருந்து அதே அளவு உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர்வரத்தைச் செயற்பொறியாளர் நரேந்திரன், உதவிச் செயற்பொறியாளர் லீலா உள்ளிட்ட அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
கவியருவி மூடல்
அதேபோல் கவியருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கவியருவி மூடப்பட்டுள்ளது. ஆழியாறு அணை அருகே சின்னார் பதி மலைவாழ் மக்கள் குடியிருப்பு உள்ளது. இங்கு 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
நேற்றிரவு கனமழை பெய்ததால் மலைவாழ் மக்களின் பாதுகாப்பைக் கருதி வனத்துறையினர் மற்றும் போலீஸார் சின்னார் பதி மலைவாழ் மக்களைக் குடியிருப்புப் பகுதியில் இருந்து வெளியேற்றி, ஆழியாறு பகுதியில் உள்ள மாகாளியம்மன் கோயில் மண்டபத்தில் தங்க வைத்தனர்.