

சிவகாசி அருகே சட்டவிரோதமாகத் தயாரித்துப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசு வெடித்ததில், வீடு இடிந்து தரைமட்டமானது. இடிபாடுகளில் சிக்கிய இருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி, நேருஜி நகர் பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வருபவர் ராமநாதன். இவர் வசிக்கும் வீட்டில் குழாய் தயாரிக்கும் பணி நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. மேலும், அங்கு சட்டவிரோதமாக ஃபேன்சி ரகப் பட்டாசுகள் தயாரித்துப் பதுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று பட்டாசு தயாரிப்புப் பணியின்போது திடீரென உராய்வு காரணமாகப் பட்டாசு வெடித்ததில் வீடு முற்றிலுமாக இடிந்து விபத்துக்குள்ளானது.
உடனடியாக அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறை வீரர்கள் இடிபாடுகளில் சிக்கிப் படுகாயமடைந்த இருவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இடிபாடுகளில் சிக்கியுள்ள நான்கு பேரை மீட்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரத்தில் பதற்றம் நிலவியது.