

காரைக்காலில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்குப் பண்டிகைக் கால வெகுமதி கூப்பன் வழங்கும் நிகழ்ச்சி இன்று (நவ.15) நடைபெற்றது.
தீபாவளி பண்டிகையை ஒட்டி, கட்டிடத் தொழிலாளர்களுக்கு ரூ.3 ஆயிரம், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெகுமதி கூப்பன்கள் வழங்கப்படும் எனப் புதுச்சேரி அரசால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் புதுச்சேரி அரசின் தொழிலாளர் நலத்துறை, புதுச்சேரி கட்டிடம் மற்றும் இதர கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம் ஆகியவற்றின் சார்பில், வெகுமதி கூப்பன் வழங்கும் நிகழ்ச்சி காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் நிர்வாக வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதில் புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, தொழிலாளர்களுக்கு வெகுமதி கூப்பன்களை வழங்கினார்.
இதில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.எம்.எச்.நாஜிம், எம்.நாக தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா, தொழிலாளர் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதன் மூலம் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 9,967 கட்டிடத் தொழிலாளர்களும், 2,500 அமைப்பு சாரா தொழிலாளர்களும் பயனடைவார்கள்.