

சென்னையில் இன்று முதல் அனைத்துப் பயணிகளும் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் புறநகர் ரயில்களில் பயணிக்கலாம் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாகப் பொதுப் போக்குவரத்தான பேருந்து மற்றும் ரயில் பயணங்களில் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன.
மத்திய, மாநில அரசுகளின் பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் கரோனாவுக்கான தடுப்பூசி நடவடிக்கை மூலம் தற்போது பாதிப்புகள் படிப்படியாகக் குறைந்து தொற்றுப் பரவல் அபாயம் குறைந்துள்ளது. இதனால் தற்போது தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்து வருகின்றன.
குறிப்பாக, சென்னையில் கடந்த வாரம் வரை பணியாளர்கள் அல்லாத ஆண் பயணிகளுக்கு மட்டும் நேரக் கட்டுப்பாடு கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று முதல் கூடுதல் தளர்களுடன் கூடிய கட்டுப்பாடுகளைத் தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி, அனைத்துப் பயணிகளும் நேரக் கட்டுப்பாடு இன்றிப் பயணம் செய்யலாம் என்றும், அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது மற்றும் கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்வது போன்ற கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.