

யாரோ ஒருவர் முழங்கால் அளவு கூட இல்லாத தண்ணீரில் படகு ஓட்டுகிறார் என்று பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுலகக் கூட்டரங்கில் சாலைப் பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்றார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ''யாரோ ஒருவர் முழங்கால் அளவு கூட இல்லாத தண்ணீரில் படகு ஓட்டுகிறார். விழுப்புரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பழுடைந்த தடுப்பணை கடந்த அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டது. தரமான தடுப்பணை கட்டியிருந்தால் எவ்வித பிரச்சினையும் இருக்காது. தரமில்லாமல் கட்டியிருந்தால் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
விபத்தைத் தடுக்கக் கல்வித் துறை மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதைப் பாடத்திட்டத்தில் கொண்டுவர முதல்வர் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும். கன்னியாகுமரி - சென்னை தொழில் வழித்தடச் சாலையில் 16 இடங்களில் திட்ட மதிப்பீடு போடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன'' என்று தெரிவித்தார்.
ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், எம்எல்ஏக்கள் பெ.ராமலிங்கம், கு.பொன்னுசாமி, ஈ.ஆர்.ஈஸ்வரன், முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்