

சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தென்கிழக்கு வங்கக் கடல் முதல் தமிழக கடற்கரை வரை வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக செவ்வாயன்று தெற்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி தமிழக கடற்கரையை நெருங்கக்கூடும். இதன் காரணமாக நவம்பர் 10,11ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
இதனால் டெல்டா மாவட்டங்கள், கடலூர், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் வரும் 10ஆம் தேதி 20 செ.மீ. வரை மழை நீடிக்கும்.
11ஆம் தேதி சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் கனமழை பெய்யும். சென்னையைப் பொறுத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை நீடிக்கும். சென்னைக்கு வரும் 10ஆம் தேதி மட்டும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தெற்கு ஆந்திரா, தமிழக கடற்கரைப் பகுதிகள், குமரி கடற்கரைப் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் மிதக்கும் சென்னை
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. தலைநகர் சென்னையில் கடந்த இரண்டு நாட்களாகவே மழை பெய்து வருகிறது. இதனால், சாலைகள் அனைத்தும் வெள்ளக் காடாகக் காட்சியளிக்கின்றன.
தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தண்ணீர் தேங்கியதால் சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. சென்னையில், இன்றும் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.