

நீட் தேர்வில் 439 மதிப்பெண்கள் எடுத்த சென்னை அரசுப் பள்ளி மாணவி, மாவட்ட அளவில் முதல் இடம் பிடித்துள்ளார்.
சென்னை முகலிவாக்கத்தைச் சேர்ந்த ரசிகா என்ற மாணவி சின்ன போரூர் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வந்தார். மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவுடன் நீட் தேர்வு எழுதிய மாணவி 439 மதிப்பெண்கள் எடுத்து மாவட்ட அளவில் முதல் மாணவியாகத் தேர்வாகியுள்ளார். இதனால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு மூலம் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து மாணவி ரசிகா கூறுகையில், "தேர்வில் வெற்றி பெற பெற்றோர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உறுதுணையாக இருந்தனர். மேலும், நீட் பயிற்சி ஆசிரியர்களின் சரியாக வழிகாட்டுதலின்படி, ஆன்லைன் வகுப்புகள் மற்றும் முறையான பயிற்சி மூலம் வெற்றி பெற முடிந்தது. நீட் தேர்வில் வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது" என்று தெரிவித்தார்.