

தமிழகத்தில் மிகக் குறைந்த அளவிலான மக்களே இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டு இருப்பதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் பாஜக சார்பில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வீடு வீடாகச் சென்று கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளப் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எல்.முருகன் கூறியதாவது:
''கரோனாவுக்கு எதிரான போரில் பிரதமர் மோடி வழிகாட்டுதலின்படி அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் நூறு கோடிக்கும் அதிகமாகத் தடுப்பூசி என்ற வெற்றியை எட்டியுள்ளோம்.
தமிழகத்தில் மட்டும் 5.94 கோடி பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதில் 93 சதவிகிதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், வெறும் 30 சதவிகிதம் பேர் மட்டுமே இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்து காணப்படுவது வருத்தமளிக்கிறது.
அடுத்தடுத்து கிறிஸ்துமஸ், பொங்கல் போன்ற பண்டிகைகள் வருவதால் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட அனைவரும் காலதாமதமின்றி உடனடியாக இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். மேலும் கரோனா தாக்கம் முழுமையாகக் குறையவில்லை என்பதை மக்கள் உணர்ந்து மக்கள் தொடர்ந்து முகக்கவசம் அணிய வேண்டும்."
இவ்வாறு எல்.முருகன் தெரிவித்துள்ளார்.