

தமிழகத்தில் மழை காரணமாகத் தடுப்பூசி முகாம் நடைபெறும் நாள் ஒத்திவைக்கப்படுவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
முதலில் ஞாயிற்றுக்கிழமைகளில் தடுப்பூசி முகாம் நடத்தி வந்த தமிழக அரசு, அசைவப் பிரியர்களின் கோரிக்கையை ஏற்று சனிக்கிழமைகளில் தடுப்பூசி முகாம் நடத்தி வந்தது. இதுவரை 7 தடுப்பூசி முகாம்களை நடத்தியுள்ள தமிழக அரசு நாளை 8-வது மெகா தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிட்டு இருந்தது.
இதனிடையே, வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை வந்ததால் அடுத்து வந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாகவும், மழையினாலும் சனிக்கிழமையான நாளை நடைபெற இருந்த 8-வது மெகா தடுப்பூசி முகாம் வரும் 14ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுபோது, “தொடர் விடுமுறை மற்றும் மழை காரணமாக நாளை நடக்கவிருந்த மெகா மருத்துவ முகாம் அடுத்த வாரம் ஒத்தி வைக்கப்படுகிறது. இதனைப் பல்வேறு துறை ஊழியர்கள் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. மேலும் நாளை வடகிழக்குப் பருவமழை காரணமாக 15 மாவட்டங்களில் மழை பெய்யும் என்பதால் வரும் 14ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும்” என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 945 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 112 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.