

தமிழக அரசு கொண்டுவந்துள்ள இல்லம் தேடிக் கல்வித் திட்டம் திராவிடக் கல்வித் திட்டம் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே பேராரில் உள்ள கட்டிடவியல் கல்லூரியின் 8-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பங்கேற்றார். தொடர்ந்து மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெறுகிறது. தமிழக அரசு தற்போது கொண்டுவந்துள்ள இல்லம் தேடிக் கல்வித் திட்டம் திராவிடக் கல்வித் திட்டம் என்பது மகிழ்ச்சி.
துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் தலையீடு இருக்கக் கூடாது. தமிழக அரசுக்கு மட்டுமே துணைவேந்தர்களை நியமிக்க அதிகாரம் இருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டு அதிமுக ஆட்சியில் துணைவேந்தர் நியமனத்தில் தமிழ்நாட்டின் தன்மானத்தை அதிமுக அரசு அடகு வைத்துவிட்டது. துணைவேந்தர் நியமனத்தில் தற்போதைய தமிழக அரசு தன்மானத்தை மீட்டெடுக்கும்.
முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் நடைபெற்று வரும் சோதனை பழிவாங்கும் நடவடிக்கை இல்லை. சட்டம் தன் கடமையைச் செய்கிறது. கோடநாடு உட்படப் பல விவகாரத்தில் பல உண்மைகள் விரைவில் வெளிவர உள்ளன'' என்று கி.வீரமணி தெரிவித்தார்.