

புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்த ஆம்புலன்ஸைச் சாமர்த்தியமாக ஓரடி உயரமுள்ள தடுப்புக் கட்டை சுவரில் ஏற்றி, அடுத்து சாலைக்கு வாகனத்தை இயக்கி நோயாளியை மருத்துவமனைக்கு ஓட்டுநர் சுகுமாறன் அழைத்துச் சென்றார்.
புதுச்சேரி சுகாதாரத் துறையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராகப் பணியாற்றி வருபவர் சுகுமாறன். பாகூரைச் சேர்ந்த இவர் பாகூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று பிற்பகலில் பாகூர் அரசு மருத்துவமனைக்கு எலி மருந்து சாப்பிட்டதாக ஒருவர் அனுமதிக்கப்பட்டார். அவரை உடனடியாக ஜிப்மர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல அறிவுறுத்தப்பட்டது.
அங்கு பணியிலிருந்த ஓட்டுநர் சுகுமாறன் தனது ஆம்புலன்ஸ் மூலம் நோயாளியை அழைத்துக் கொண்டு வந்தார். அப்போது 100 அடி சாலையில் உள்ள மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தபோது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனம் இயங்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை அறிந்து, தவித்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சுகுமாறன், ஒருகணம் கூட யோசிக்காமல் மனித உயிரைக் காப்பாற்ற முடிவு எடுத்தார். அங்கிருந்தோரின் உதவியோடு சிறிய கற்களை வைத்து சுமார் 2 மீட்டர் நீளமும், ஒரு அடி உயரமும் உள்ள தடுப்பு கட்டைச் சுவர் மீது சாமர்த்தியமாக ஆம்புலன்ஸை ஏற்றினார்.
இதன் மூலம் அக்கட்டைச் சுவரைக் கடந்து மாற்றுச் சாலை வழியாக நோயாளியை ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதனை அங்கிருந்த ஒருவர் தனது மொபைல் போன் மூலம் புகைப்படமும், வீடியோவும் எடுத்துப் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.