

கரூர் ஜவஹர் கடைவீதியில் உள்ள தனியார் இனிப்பகத்தில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து கரூர் தீயணைப்பு நிலையத்தினர் தீயை அணைத்தனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று கரூர் ஜவஹர் கடைவீதியில் புத்தாடைகள், பட்டாசு, இனிப்புகள் வாங்க மக்கள் அதிகளவில் குவிந்திருந்தனர். கரூர் ஜவஹர் பஜாரில் தனியார் இனிப்பகம் உள்ளது. இங்கு இனிப்பு, காரம் என தீபாவளி பலகாரங்கள் தயாரிக்கும் பணி மற்றும் விற்பனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இக்கடையில் இன்று (அக். 31ம் தேதி) காலை 10 மணியளவில் காஸ் சிலிண்டரில் இருந்து காஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஊழியர்களே தீயையை அணைத்து மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினர்.
இதுகுறித்துத் தகவல் அறிந்த கரூர் தீயணைப்பு நிலையத்தினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று தீ பிடித்த பகுதியைப் பார்வையிட்டு தீ ஏற்படாமல் பாதுகாப்பாகச் செயல்பட அறிவுறுத்தினர். தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பொது மக்கள் காயமின்றியும், பொருட்சேதம் ஏற்படாமலும் தவிர்க்கப்பட்டது.
தீபாவளி நேரத்தில் விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமை மக்கள் கூட்டம் அதிகளவில் இனிப்பு வாங்க வந்திருந்த நிலையில் தீ விபத்து ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.