

திருப்பூர் அருகே உடுமலை பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி நடைபெற்றது. இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் இருந்து திருப்பூர் செல்லும் சாலையில் ஏரிப்பாளையம் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையம் அமைந்துள்ளது. அங்கு இன்று (அக்.28) அதிகாலை 2 மணி அளவில் முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர், உள்ளே புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டார்.
அந்த நபர் இரும்பு ஆயுதத்தைக் கொண்டு இயந்திரத்தின் வெளிக் கதவை உடைத்தார். இந்த நிலையில், பணம் இருந்த இயந்திரத்தின் கதவையும் அவர் உடைக்க முயன்றார். ஆனால் அது முடியாததாலும் அலாரம் அடித்ததாலும், மர்ம நபர் தப்பி ஓடினார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் லுங்கி கொண்டு சிசிடிவி கேமராவை மூடியுள்ளார். அதற்கு முன்பு வரையிலான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
சம்பவம் குறித்து உடுமலைப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நன்கு பரிச்சயமான நபர் கொள்ளையடிக்க வந்து சென்றிருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர்.