

நாங்கள் அனைவரும் உங்களுடன் இருக்கிறோம் என்று முகமது ஷமிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.
துபாயில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவில் பாகிஸ்தான் அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதுவரை 12 முறை உலகக் கோப்பையில் பாகிஸ்தானுடன் மோதிய இந்திய அணி முதல் தோல்வியைச் சந்தித்தது.
இந்தத் தோல்வியைத் தாங்க முடியாத ரசிகர்கள், நேற்றைய ஆட்டத்தில் மோசமாகப் பந்துவீசிய இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியை அவதூறாக சமூக ஊடங்களில் விமர்சித்தனர். முகமது ஷமி குறித்தும் அவரின் குடும்பத்தினர், தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் மோசமாக ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அவமானப்படுத்தினர்.
ஷமியை டேக் செய்து தொடர்ந்து ட்ரால் செய்து வருகின்றனர். மேலும், விராட் கோலியின் கேப்டன்ஷிப் குறித்தும் மோசமாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் பலரும் ஷமிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “ முகமது ஷமி, நாங்கள் அனைவரும் உங்களுடன் இருக்கிறோம். இந்த மனிதர்கள் வெறுப்பால் நிரம்பி இருக்கிறார்கள். ஏனெனில் அவர்களுக்கு யாரும் அன்பைத் தரவில்லை. அவர்களை மன்னித்துவிடுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.