திருச்சி அருகே இடி தாக்கி வீடு சேதம்: காது பாதிக்கப்பட்டதாக 5 பேர் மருத்துவமனையில் அனுமதி

திருச்சி அருகே இடி தாக்கி வீடு சேதம்: காது பாதிக்கப்பட்டதாக 5 பேர் மருத்துவமனையில் அனுமதி
Updated on
1 min read

திருச்சியில் நேற்று இரவு இடி தாக்கியதில் வீடு மற்றும் வீட்டில் இருந்த மின்சாதனப் பொருட்கள் சேதமடைந்தன. இடி தாக்கியதில் அந்த வீட்டில் இருந்த 5 பேரின் காது பாதிக்கப்பட்டு இருப்பதாகக் கூறி, திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. அப்போது, இனாம்குளத்துார் அருகேயுள்ள சின்ன ஆலம்பட்டியில் செல்வம் (60) என்பவரது வீட்டில் இடி தாக்கியது. இதில், அந்த வீட்டின் ஒரு சுவரில் பெரிய விரிசல் ஏற்பட்டது. மேலும், வீட்டின் பிரதான கதவு மற்றும் மின்விசிறி உள்ளிட்ட மின்சாதனப் பொருட்கள் சேதமடைந்தன.

வீட்டிலிருந்த செல்வம், அவரது மனைவி இந்திரா (55), மகன் செல்வகுமார் (29), செல்வத்தின் உறவினர்கள் தனலட்சுமி (60), ஆனந்தகுமார் (31) ஆகிய 5 பேரும் காயமின்றித் தப்பினர். இருப்பினும், 5 பேரும் காதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். இடி தாக்கியதில் கிராமத்தில் மின் தடை ஏற்பட்டது.

செல்வம் அதிமுக கிளைச் செயலாளராக உள்ளார். இடி தாக்கிய சம்பவம் குறித்துத் தகவலறிந்த அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் மு.பரஞ்ஜோதி சேதமடைந்த வீட்டை இன்று நேரில் சென்று பார்வையிட்டதுடன், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 5 பேரையும் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

இதேபோல் ஸ்ரீரங்கம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.பழனியாண்டியும், இன்று அரசு மருத்துவமனைக்குச் சென்று 5 பேரையும் நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in