

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே வயலிலிருந்து சாலைக்கு வந்த டிராக்டர் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொரு இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
செந்துறை அடுத்த குழுமூர் செல்லியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர்கள் தினேஷ் (22) மற்றும் ஆறுமுகம் (22). தனியார் கல்லூரியில் படித்து வரும் இருவரும் நேற்று (அக். 22) இரவு குழுமூரிலிருந்து அங்கனூரில் உள்ள தனது தாத்தா வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
வங்காரம் அருகே சென்றபோது, வயலிலிருந்து சாலையை நோக்கி டிராக்டர் ஒன்று வந்து சாலையில் ஏறியுள்ளது. அப்போது, டிராக்டர் வருவதை கவனிக்காத தினேஷ், இருசக்கர வாகனத்தை அதன் மீது மோதியுள்ளார்.
இதில், இருவரும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து இருவரும் செந்துறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இன்று காலை (அக். 23) தினேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆறுமுகம் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து செந்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் குழுமூர் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.