Published : 16 Oct 2021 03:08 PM
Last Updated : 16 Oct 2021 03:08 PM
இந்தோனேசியாவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆகப் பதிவானது.
இதுகுறித்து அமெரிக்கப் புவியியல் மையம் தரப்பில், “இந்தோனேசியாவின் பாலி தீவில் இன்று (சனிக்கிழமை) மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆகப் பதிவானது. இதன் ஆழம் 10 கி.மீ. பாலி தீவைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் குறித்து ஊடகங்கள், “இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 3 பேர் பலியாகி உள்ளனர். பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதால் அதனைச் சரிசெய்யும் பணிகளில் மீட்புப் படையினர் இறங்கியுள்ளனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளன.
2004ஆம் ஆண்டில் இந்தோனேசியாவிலுள்ள சுமத்ரா தீவில் 9.3 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சுனாமி தாக்குதலை அடுத்து 2,20,000 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
நிலநடுக்கம் உள்ளிட்ட பேரழிவுப் பிரதேசங்களில் இந்தோனேசியா முதன்மையான இடமாக உள்ளது. குறிப்பாக பசிபிக் நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் பகுதியில் இந்தோனேசியா உள்ளது.
இப்பகுதியில் பூமியைத் தாங்கும் பெரும்பாறைகள் ஒன்றையொன்று உரசிக்கொள்ளும், மோதிக்கொள்ளும். இதன் காரணமாக இப்பகுதியில் நிலநடுக்கங்கள் அதிக அளவில் ஏற்படுகின்றன. இங்கு எரிமலைச் சீற்றங்கள் அதிகம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT