Published : 12 Oct 2021 04:40 PM
Last Updated : 12 Oct 2021 04:40 PM
தமிழகம் முழுவதும் 331 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்னர் என, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இன்று (அக்.12) சென்னை கண்ணகி நகரில் 'கலைஞரின் வருமுன் காப்போம்' திட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்குப் பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"டெங்கு காய்ச்சல் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 331 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்னர். 2 குழந்தைகள் உள்ளிட்டோரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, உள்ளாட்சி நிர்வாகங்களின் சார்பிலும், மருத்துவத் துறையின் சார்பிலும் வீடுகளில் தேவையற்ற இடங்களில் தேங்கியுள்ள நீரை அகற்றுவது, கொசு மருந்து தெளிப்பது, புகை மருந்து அடிப்பது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
ஒவ்வொரு பருவமழை தொடங்குவதற்கு முன்பும், தற்போது வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பு முதல்வர் சேவைத் துறைகளுடனான கூட்டம் நடத்தி, ஒவ்வொரு துறையும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிகழ்ச்சிக்குப் பிறகு தியாகராய நகரில் உள்ள சர்.பிட்டி தியாகராயர் அரங்கில் சென்னை கட்டிடத் தொழிலாளர் சங்கம், வணிகர்கள் உடனான கூட்டம் நடைபெற உள்ளது. சென்னையில் 7,707 இடங்களில் கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெறுகின்றன. இந்த இடங்களில்தான் தண்ணீர் தேவையற்ற இடங்களில், தேங்காய் ஓடுகள், பள்ளங்களில் தேங்கி நிற்பது அதிகமாக இருக்கும். இவற்றை அகற்றிட அச்சங்க நிர்வாகிகளுக்குத் தெரிவிக்க இருக்கிறோம். அப்படி இல்லையென்றால் உள்ளாட்சி நிர்வாகங்களின் சார்பில் அபராதம் விதிப்பது பற்றியும் தெரிவிக்க இருக்கிறோம்".
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT