

கரோனா தடுப்பு நடவடிக்கையில் இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் முதலிடத்தில் தமிழ்நாடு உள்ளது என வைகோ கூறியுள்ளார்.
விளாத்திகுளம் அருகே சங்கரலிங்கபுரத்தில் மதிமுக முன்னாள் ஒன்றியச் செயலாளரும், பேச்சாளருமான எரிமலை வரதன் மறைவையொட்டி அவரது வீட்டுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வந்தார். அங்கு அலங்கரிக்கப்பட்ட எரிமலை வரதன் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
வைகோவுடன் வடக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விநாயகா ஜி.ரமேஷ், கோவில்பட்டி நகரச் செயலாளர் பால்ராஜ், ஒன்றியச் செயலாளர்கள் ராஜேந்திரன், காளிச்சாமி, குறிஞ்சி, கார்த்திகேயன், மணிராஜ், மாவட்டத் துணைச் செயலாளர்கள் தாயகம் செல்வராஜ், வழக்கறிஞர் குருசாமி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
தொடர்ந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறுகையில், “அண்ணாமலை பெங்களூருவில் போலீஸாக இருந்தவர். அதனால் போலீஸ் எண்ணத்திலேயே பேசிக்கொண்டுள்ளார். அரசியல் கொள்கையைப் பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது. குஜராத்தில் உள்ள அதானி துறைமுகத்தில் இருந்து கஞ்சா கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படுவதில், பாஜகவினரே குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும்போது எப்படி அவர்கள் கருத்து சொல்ல முடியும். கரோனா தடுப்பு நடவடிக்கையில் இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய அளவுக்கு தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது’’ என்று தெரிவித்தார்.