

உத்தரப் பிரதேச மாநிலம், லக்கிம்பூர் கெரி பகுதியில் விவசாயிகள் கொல்லப்பட்டது, பிரியங்கா கைதை எதிர்த்து காரைக்காலில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம், லக்கிம்பூர் கெரி பகுதியில் கார் மோதி விவசாயிகள் உயிரிழந்த சம்பவம், அதைத் தொடர்ந்து நடைபெற்ற விவசாயிகள் மீதான தாக்குதல், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கைது ஆகியவற்றுக்குக் கண்டனம் தெரிவித்தும், இவற்றைத் தடுக்கத் தவறிய உத்தரப் பிரதேச பாஜக அரசு மற்றும் மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்தும் காரைக்காலில் காங்கிரஸ் கட்சியினர் இன்று(அக்.10) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாவட்டத் தலைவர் ஆர்.பி.சந்திரமோகன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.கமலக்கண்ணன், துணைத் தலைவர் பஷீர், மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஜெ.சிவகணேஷ், கருணாநிதி, முன்னாள் எம்.எல்.ஏ ஏ.மாரிமுத்து உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் திரளானோர் கலந்துகொண்டனர்.