

ரவுடிகளை அடக்கி ஒடுக்குவதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைப் போலவே, முதல்வர் ஸ்டாலினும் நடவடிக்கை எடுக்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட தன்னுடைய மதுரை மேற்குத் தொகுதியில் நடைபெறும் அடிப்படை வசதிகள் சார்ந்த பணிகளை விரைவுபடுத்துமாறு மாநகராட்சி ஆணையர் கே.பி.கார்த்திகேயனைச் சந்தித்து மனு அளித்தார்.
அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''மதுரை மாநகராட்சியில் உள்ள பிரதான சாலைகள், குடியிருப்பு சாலைகள், தெருக்கள் அனைத்தும் மேடு பள்ளமாக உள்ளன. அதனை விரைவில் சீரமைக்க வேண்டும். பாதாளச் சாக்கடை தண்ணீர் குடிநீரில் கலக்கிறது. அதனை அலட்சியப்படுத்தாமல் மாநகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த ஆட்சிக் காலங்களில் கொடுக்கப்பட்ட டெண்டர்களை ரத்து செய்து விட்டார்கள். அந்த டெண்டர்களில் எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை. எனவே, அந்தப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது ஆட்சிக் காலங்களில் ரவுடிகளை அடக்கி ஒடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருந்தார். அதேபோல தற்போதைய முதல்வர் ஸ்டாலினும் ரவுடிகளை ஒடுக்க முயற்சி எடுத்துள்ளார். அது வரவேற்கத்தக்கது'' என்று செல்லூர் ராஜூ தெரிவித்தார்.