

கோவை அரசு மருத்துவமனையில் 3 ஆண்டுகளில் 5,000 பேருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் டீன் டாக்டர் நிர்மலா தெரிவித்தார்.
கோவை அரசு மருத்துவமனையின் இதயத் துறை சார்பில் உலக இதய தின விழா இன்று (செப்.29) நடைபெற்றது. இதனைத் தொடங்கிவைத்து டீன் நிர்மலா பேசுகையில், "இருதயத்தைக் காக்க மதுப்பழக்கம், புகைப்பழக்கம் மற்றும் ஆரோக்கியமற்ற உணவைத் தவிர்ப்பது முக்கியம். கோவை அரசு மருத்துவமனை 5 மாவட்டங்களுக்கான மண்டல மருத்துவமனையாகச் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள இதயத் துறையில், மாரடைப்புடன் வரும் நோயாளிகளுக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை, ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக மருத்துவமனையில் கடந்த 2018 மார்ச் மாதம் 'கேத் லேப்' நிறுவப்பட்டது.
அப்போது முதல் மாரடைப்பு நோயாளிகளுக்கு ஆஞ்சியோகிராம் மற்றும் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 23-ம் தேதியன்று 5,000-வது ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டது. மிகக் குறுகிய காலகட்டத்தில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 3,250-க்கும் மேற்பட்ட ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
கரோனா பெருந்தொற்றுக் காலத்திலும் மாரடைப்பு நோயாளிகளுக்கு ஆஞ்சியோகிராம் மற்றும் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது" என்று டீன் டாக்டர் நிர்மலா தெரிவித்தார்.
இந்த விழாவில் இதயத் துறைத் தலைவர், பேராசிரியர் டி.முனுசாமி, இணைப் பேராசிரியர் நம்பிராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.