

புதுக்கோட்டை மாவட்டத்தில் இயந்திரம் மூலம் நேரடி நெல் விதைப்பு குறித்து விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, செயல் விளக்கம் அளிப்பதற்காக 150 ஏக்கர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மணமேல்குடி வட்டாரத்தைச் சேர்ந்த 19 விவசாயிகளுக்கு கோலேந்திரத்தில் இயந்திரம் மூலம் நேரடி நெல் விதைப்புக்கான செயல் விளக்கத்தை இன்று (செப். 28) தொடங்கிவைத்து மாவட்ட வேளாண் இணை இயக்குநர் இராம.சிவகுமார் பேசியதாவது:
"இயந்திரம் மூலம் நேரடி நெல் விதைப்பு செய்வதனால் நாற்றங்கால் தேவையில்லை. சீரான முறையில் விதைப்பதனால் பயிர்களை நன்கு பராமரிக்கலாம். இதன் மூலம் நீர் தேவையும் 20 சதவீதம் குறைகிறது. 10 நாட்களுக்கு முன்பே அறுடை செய்துவிடலாம். சாகுபடி செலவும் குறைகிறது. நேரடி விதைப்புக்கான கருவியானது வேளாண் பொறியியல் துறை மூலம் ஏக்கருக்கு ரூ.350 வீதம் வாடகைக்கு விடப்படுகிறது.
இம்மாவட்டத்தில் நேரடி விதைப்பு செயல் விளக்கம் அளிப்பதற்கு 150 ஏக்கர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு, ஏக்கருக்கு 40 கிலோ விதை நெல், 12.5 கிலோ நுண் சத்து, 1 லிட்டர் திரவ உயிர் உரம், 2 கிலோ பயறு விதை, 2.5 கிலோ சூடோமோனாஸ் உயிர் உரம் ஆகியவை இலவசமாக வழங்கப்படுகின்றன. விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்".
இவ்வாறு இராம.சிவகுமார் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், வேளாண் உதவி இயக்குநர் வனஜாதேவி, வேளாண் அலுவலர் முனியய்யா, வேளாண் துணை அலுவலர் ராஜேந்திரன், வேளாண் உதவி அலுவலர் பார்கவி, ஊராட்சித் தலைவர் செல்லம்மாள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.