

சமீபத்தில் வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
வடகொரியா, கிழக்குக் கடற்பகுதியில் இரண்டு ஏவுகணை சோதனைகளை நடத்தியது. மேலும், ஒரே வாரத்தில் இரண்டு முறை ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இதனால கொரிய தீபகற்பப் பகுதியில் பதற்றம் நிலவியது. தென்கொரியாவும் இதற்கு கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில் வடகொரியாவின் ஏவுகணை சோதனை குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில், “ வடகொரியாவின் சமீபத்திய ஏவுகணை தாக்குதலுக்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை வடகொரியா மீறுகிறது. மேலும், அண்டை நாடுகளுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளது. நாங்கள் வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருக்கிறோம். அவர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் ஆட்சியில், ஏவுகணை சோதனை தொடர்பாக வடகொரியாவுக்கும் - அமெரிக்காவுக்கும் கடுமையான மோதல் நிலவியது. இதன் காரணமாக வடகொரியாவின் மீது பல பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.