

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை மற்றும் மிதமான மழை, பயங்கர இடி மின்னலுடன் பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் வரும் 26ஆம் தேதிவரை 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை லேசானது முதல் மிதமான மழை இரண்டு நாட்களுக்குப் பெய்யக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.